***மேலுமஂ அறிய***
மெஞ்ஞான குருகுல பரிபூரண சபை அறிமுகம்
மெஞ்ஞான குருகுல பரிபூரண சபையின் நிறுவனர் ஆதிசைவ பீடாதிபதியும் அறுபடை வீட்டின் நாயகருமான முருகன் என்ற சுப்பிரமணியன் பாரம்பரியத்தில் வழி வந்த சமாதான இல்ல பீடாதிபதியும் , நித்திய கயிலை வாசியுமான , குருமகான் ஸ்ரீலஸ்ரீ துரைபாவா அவர்களை மெஞ்ஞான குருகுல பரிபூரண சபையின் நிறுவனரும் மற்றும் தலைவருமான முருகானந்தன் அவர்கள் மெஞ்ஞான குருவாக ஏற்று, அவர்களின் உபதேசமாக பூரண ஞான தீட்சையைப் பெற்று அவர்களின் இசைவுக்கு இணங்கி 40 ஆண்டுகளுக்கும் மேல் தவ வாழ்க்கை வாழ்ந்து, குருசேவை புரிந்து , மெஞ்ஞானப்பிறவியர்களுக்கு சத்சங்கங்கள் நடத்தி, உயர்ந்த ஆத்ம ஞானத்தை அடைந்து, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு ஐயன் பிரம்மஞானி என முடி சூட்டப் பெற்றார். மேலும் எல்லா உயிர்களிடத்தும் இறை அன்பர்களிடத்தும் கொண்ட அதீத அன்பினாலும் கருணையினாலும் ஜாதி, மதம், சடங்குகள், இனம், மொழி, நிறம், பாலினம் கடந்து அமைதியுடனும், நிம்மதியாகவும் வாழக்கூடிய துடிப்பான, புனிதமான ஆன்மீக சமூகத்தை உருவாக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
இன்றைய காலத்தில், இந்த உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய மிகக் கொடிய கொரோனா வைரஸ் போன்ற நோய்களாலும், பல்வேறு நாடுகளுக்கு இடையில் நடைபெற்று வரும் போர்களாலும் பாதிக்கப்பட்டு மக்கள் சொல்ல முடியாத பெருந்துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அணு ஆயுதம் மற்றும் உயிரி ஆயுதங்களால் (Bio-War) நடத்தப்படும் சோதனைகளால் ஏற்படுத்தப்படும் அழிவுகளும், மனித குலத்துக்கு அச்சத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவை மட்டுமின்றி மனிதர்கள் தங்களுக்குள் கொண்டுள்ள பகைமை, கர்வம், பொறாமை, கோபம், வெறுப்புணர்வு, வன்முறை, சகிப்புத்தன்மை இன்மை, அதிருப்தி, பாரபட்சம், இரக்கமின்மை போன்றவற்றால் தங்களைத் தாங்களே இன்னல்களுக்குள் சிக்கவைத்து, நிம்மதியையும், அமைதியும் இழந்து வருகின்றனர். இவைகள் அனைத்தும் "இறைவாநிலை பெறலாம் இன்பமுறலாமே", எனும் முக்திநிலையை அடைவதற்கு தடைகளாக உள்ளன.
காணப்படும் இந்த பிரபஞ்சம், இந்த உலகத்தை விட 250 மடங்கு பெரியது என பிரபஞ்ச ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அவைகள் அனைத்தும் மாயத் தோற்றம் என்றும், பொய்த் தோற்றம், நிலையற்றது என்றும், சம்சார சாகரம் என்றும் ஆன்மீக ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உலகில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும் அநித்தியமாகவும், அழியக்கூடியவைகளாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம்.
எவ்வாறு இருந்தாலும் இன்றும் இந்த உலகில் கணக்கிட முடியாத நம்பிக்கைகளும், சமய நூல்களும், வேத நூல்களும், போதனைகளும், சமயம் சார்ந்த நிகழ்வுகளும், குருகுல கல்வியும், ஒவ்வொரு மனிதனையும் இறைவனை அடையும் முக்தி நிலை எய்துவதற்கு வழிகாட்டியாக இருக்கின்றன. ஆனால் இறைவனைத் தேடி முக்தியை அடையும் பயணத்தில் பயணிப்பவர்களும் மற்றும் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவால் தன்னை உணர்ந்து தவ நிலை ஏற்று இறைவனை அடைந்து வெற்றி கண்டவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஞானிகளின் பாடல்கள் மூலம் அறியலாம்.
1. மாணிக்கவாசகர் சுவாமிகள் தன்னுடைய திருவாசகம் என்னும் நூலில் திருப்பள்ளி எழுச்சி எனும் பாடலில் பின்வருமாறு கூறியுள்ளார்
“கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை”
2. திருவள்ளுவரும் திருக்குறள் எனும் நூலில் “தவம்” எனும் அதிகாரத்தில் பின்வருமாறு சுட்டிக்காட்டி உள்ளார்
”இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்”
மேலும் ஞானிகளும் சித்தர்களும் தவமே பெறல் வேண்டும் என்பதையும், “தவமே” பிறப்பு மற்றும் இறப்பு என்னும் சுழலிலிருந்து விடுவித்து மரணமிலாப் பெருவாழ்வு எய்திட உதவுகிறது என்று திருக்குறளில் "தவம்" எனும் அதிகாரத்தில் தவத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
3. திருமூலரின் திருமந்திரம் நூலில் பின்வருமாறு விளக்குகிறார்:
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே”
அதாவது இந்த உலகில் உள்ள மனித குலம் ஒன்றே, அக்குலத்திற்கான இறைவன் ஒருவனே என திருமூலர் அருளியுள்ளார். இப்போதனை மதப்பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மக்களிடையே உலக சமாதானத்தை போதனை செய்துள்ளது. இறப்பை தவிர்க்கும் மருந்தாக உள்ள இறைவனை அடைய குருகுலக் கல்வியும் தவமும் இன்றியமையாதது.
இன்றும் பல மனிதர்கள் தன்னுடைய மனம் போன போக்கில் இறைவனை தேடி பொய்க்குருவை நாடி, ஞானத்தையும் அடைய முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகி வாழ்க்கையில் தோல்வியைத் தழுவுகின்றனர்.
மேலும் இந்த உலகக் கல்வி யாவும் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கும், சொகுசாக வாழ்வதற்கு ஆகும். அது முக்திக்கு வழிகாட்டாது. வெறும் சாஸ்திரக் கல்வி ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாததை போன்றதாகும் இவ்வளவு கல்வியானது.
" நீரில் எழுத்து இவ்வுலகர் அறிவது வானில் எழுத்தொன்று கண்டறிவாரில்லை"
என திருமூலர் திருமந்திரம் நூலில் நாம் ஏட்டுக்கல்வியின் மூலம் பெற்ற அறிவானது தண்ணீரின் மேல் எழுதிய எழுத்துக்கொப்பானது, என்றும் நிலையில்லாதது என்றும், சாகாக்கல்வி பெறவேண்டும் எனவும் அருளியுள்ளார் .
ஆன்மீகத்தையும் ஞானத்தையும் அடைய முறையாக பயின்று கொள்ள முயற்சிப்பவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றற்ற பக்தியும், ஆடம்பரமின்மையும், மன நிறைவும், சகிப்புத்தன்மையும், கருணையும், பரிவும், விடாமுயற்சியும், நன்மையையே செய்வதும் போன்ற உயர்ந்த பண்புகளை தன்னுள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேலும் இறைவனை அடையும் முக்திக்கு வழிகாட்டும் ஞானக் கல்வியை, ஞான உபதேசத்தை குருவிடம் பெற்று, தவம் மேற்கொண்டு, நேரான வழியில் வாழ்ந்து, முக்தி அடைவதே மரணமில்லா பெருவாழ்வு வாழ்வதே இப்பிறப்பின் நோக்கம். இதையே வள்ளலாரும்
“சாகாதவனே சன்மார்க்கி” என்றும், “மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்” என்றும், "இறந்தவர் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்" என்றும்,
தன்னுடைய திருவருட்பா நூலில் அருளியுள்ளார்கள். அதை விடுத்து உலகியல் வாழ்வான சம்சார வாழ்க்கையில்
“கற்றதும் கேட்டதும் ஏதுக்காகும், கடபுடவென்று உருட்டுதற்கோ”
என்றபடி உழன்று மரணம் ஏற்பட்டால் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பிறப்பு இறப்பு சூழலில் சிக்கி சீவன் நரகமே எய்தும். பெரும்பாலோர் மரணத்திற்குப் பிறகு முக்தி கிட்டும் என கருதுகிறார்கள். அது தவறு. ஏனெனில் இப்படி நிலவிவரும் நம்பிக்கைக்கு என்ன ஆதாரம் உள்ளது? வெறும் நம்பிக்கை மட்டும் உண்மை ஆகாது.வாழும்போதே மனிதன் முக்தி நிலை அடைந்து விட்டோம் என்பதற்கு அவரவர்கள் தம் உள்ளத்தில் கண்ட அனுபவமே சான்றாக இருக்கும்.
நம் முன்னோர்களான சித்தர்களும், ஞானிகளும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழும் போதே முக்தி நிலையை அடைந்திருக்கிறார்கள். ஜீவன் பரமாத்மாவுடன் கலந்து முக்தி பெற்று ஒவ்வொரு மனிதனும் சமாதி நிலையை எய்த முடியும், இதற்கு ஞான குருவின் அருள் இன்றியமையாதது. ஆகவே மெஞ்ஞான சற்குருவை நாடி தீட்சை எனும் வேத விளக்கத்தை ஞான உபதேசமாக பெற வேண்டும், சற்குருவே இறைவனும் ஆவார். அதனை அகஸ்தியரும் அவரது பாடலில் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார்கள்
“ஆசானும் ஈசானும் ஒன்றே ஆகும் ஈசானை ஆசானாய் காணும் பேர்க்கிங் இன்பமுடன் கைலாயம் எய்தலாமே” , ஔவையாரும் “குருவில்லா வித்தை பாழ்” என்று வலியுறுத்தி கூறுகிறார்.
நாம் வாழ்நாள் முழுவதும் படித்தும், பாடியும், நாடியும், தேடியும், அலைந்தும் காண முடியாத இறைவனை நம் மீது கருணை கொண்ட சற்குருவின் மூலம் உணரப்பெற்று பிறவிப் பயனை அடையலாம்.
அவ்வாறு குருவிடம் சாகாக் கல்வியையும் ஞானத்தையும் பெற்று, தவம் மேற்கொண்டு ஆன்மீகப் பாதையில் இறைவனை அடையும் வழியில் வெற்றி கண்ட பிரம்மஞானி ஐயன் முருகானந்தன் அவர்களே மெஞ்ஞான குருகுல பரிபூரண சபையின் குருவாக மெய் அன்பர்களுக்கு ஞான உபதேசம் செய்து வருகிறார்கள். மேலும் “யான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்றபடி இந்த உலகத்தையும் உலக மக்களையும் அருளால் உய்வித்து சக்தி வாய்ந்த ஒரு சமுதாயத்தை நேரான ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்ல கருணை கொண்டுள்ளார்கள்.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்"
என்ற குரள் மொழிக் கொப்ப குருநாதர் ஸ்ரீலஸ்ரீ துரை பாவா அவர்கள் தனக்குபின் ஞான வாரிசாக வர தகுதியுடையவர் இவரே என அறிந்து அவருக்கு "சாலப்பரிந்து ஊட்டும் அன்னைக்கும்" மேலாக சிறிது சிறிதாக ஞானக் கல்வியின் வாழ்க்கை நடைமுறைகளையும், தவ வாழ்க்கையின் நடைமுறைகளையும், இல்வாழ்க்கையில் இருந்து கொண்டே இயல்பாக அமையுமாறு பயிற்றுவித்தார்.
பக்குவமுடைய நமது குருநாதரும், குரு பணித்தபடி, "கல் ஆல் எம்மான் குற்றமறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு குணம்குறி அற்று இன்ப நிஷ்டை கூட அன்றோ" என்ற மொழிக் கிணங்க தவத்தில் நிலை நின்று, எவ்வாறு நமது ஆதி ஞானபிதா சுப்பிரமணியர் தவத்தின் போது எந்த உணவை பக்குவப்படுத்தி உண்டார்களோ, அதே தவ உணவை உண்டும் நிஷ்டைக் காத்தும், பரிசுத்தத்தை பேணிப் பாதுகாத்தும், தவத்தில் கைவல்யம் எய்தப் பெற்றார்.
"தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள் வது"
எனும் பாடலுக்கு இணங்க “தவம் உடையவர் ஆகி”, “தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”, என்ற சித்தர் மொழிக்கிணங்க, தான் பெற்ற பேற்றினை நமது மெஞ்ஞானப் பிள்ளைகளும், உலகத்தாரும் பெற வேண்டும் என்ற அருள் நோக்குடன் முதியவர்களுக்கு மட்டும்தான் தவப் பயிற்சி என்றில்லாமல் இளைஞர்களுக்கும் தவப் பயிற்சி தேவை என்று, தவத்தை மக்களுக்கு பயிற்றுவித்தும்
" ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்"
என்றபடி உவந்தார்களை தவத்துடையவர்களாக்கி மெஞ்ஞான பிள்ளைகளை எல்லாம் " ஆற்றலின் தலைப் பட்டவர்களாக" மாற்ற வேண்டும் என்ற பெரு நோக்குடன் பணியாற்றி வருகின்றார்கள்.
“காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர்; அகண்டாகார சிவ போகம் எனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது, ஐயோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் ஜகத்தீரே!”
“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே.”
என்றபடி உலக மக்கள் அனைவரும் பிறப்பு, இறப்புக்கு ஆட்படாமல் முக்தி அடைந்து, தன்னைத்தான் அறிந்து இன்பமுற்று, மரணமிலா பெருவாழ்வு வாழவும், இறைவனை அடையவும், தன்னுடைய குரு கூறிய ஆன்மீக போதனைகள் மூலமும், ஞானிகள், சித்தர்களின் பாடல்கள் மூலமாகவும், உபதேச குறிப்புகள் மூலமாகவும், ஆன்மீக அன்பர்களையும் சக்தி வாய்ந்த இளைய சமுதாயத்தையும் சன்மார்க்க நன்நெறியில் அழைத்துச் செல்லவும் தன்னையே இந்த ஞானவேள்விக்கு அர்ப்பணித்து தொண்டாற்றி வருகின்றார்கள் மெஞ்ஞான குருகுல பரிபூரண சபையின் நோக்கமும் கொள்கையும் இதுவே ஆகும்.
